சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் பூஜ்ய நாள் ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றைக் கண்டறியலாம்.
பொதுவாக, சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக் குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும். ஆனால், ஒரு வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில் கூட காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காண இயலா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் பூமியின் விட்டத்தைக் கண்டுபிடித்தனர். தமிழகத்தில் 25-8-2022 அன்று பிற்பகல் 12:23 மணிக்கு பூஜ்ஜிய நிழல் நிகழ்வு ஏற்பட்டது.
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்குக் கீழே தெரிந்தது. பக்கத்தில் நிழலாகத் தெரியாததை மாணவர்கள்,பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். விடுமுறை நாளாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளைப் பார்த்து அதன் அறிவியல் விவரங் களைத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தங்களைச் சுற்றியுள்ள பெற்றோர் களுக்கும், பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கிக் கூறினார்கள்.
நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்குக் கொடுத்த தகவலில், ‘‘பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்குச் சமமாக மாறும்போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரியக் கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்குக் கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது.’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் முத்தய்யன், திவ்யஸ்ரீ, தேவதர்ஷினி, யோகேஸ்வரன் ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவப் பொருளை வைத்து செய்து பார்த்தனர். தங்களின் நிழல் தங்களுக்குத் தெரியாததைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். தங்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்துக் கூறினார்கள்.
தங்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதனைச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைதல பதிவுகள் , தகவல்கள் தங்களுக்கு நல்ல உதவியாக இருந்ததாகக் கூறினார்கள்.