ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் பருவ இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

0 0
Spread the love
Read Time:12 Minute, 26 Second

குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்பு களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

4 மற்றும் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிருமுறை இதழாக வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ மாத இதழ் ஆகிய பருவ இதழ்களை வெளியிட்டப்பட்டன.

குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். இந்த மூன்று இதழ்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் 12-10-2022 அன்று வெளியிட்டார். அவ்விதழ்களைப் பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடநூல் கழகத் தலைவர் லியோனி, தலைமைச் செயலர் இறையன்பு, பள்ளிக் கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் பங்கேற்றனர்.

அன்று மதியம் 12 மணி அளவில் பசுமைப் பள்ளி விருது பெற்ற திருவள்ளூர் மாவட்டம், போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூன்று பருவ இதழ்களையும் மாணவர்களிடம் அறிமுகப்படுத்திப் பேசினார்.

உலகம் முழுவதும் தற்போது புவி வெப்பமயமாதல், கார்பன் வெளிப்பாட்டை குறைப்பதற்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கும் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதையொட்டி பசுமை உருவாக்கம் மற்றும் மரங்கள் வளர்த்தல் குறித்த ஆர்வம் பல்வேறு தரப்புகள் மத்தியிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. அரசுத் தரப்பில் குறுங்காடுகள் வளர்த்தல், பசுமை வளாகம் போன்ற பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் சூழலில் பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளும் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. பசுமைப்படை போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போரூர் அரசு மகளிர் மாணவிகளுக்குப் பசுவையில் ஆர்வம் ஏற்படுத்த பள்ளியில் தோட்டம் அமைப்பது செடி, கொடி, மரங்கள் மீதான ஆர்வத்தை உருவாக்குவது போன்ற செயல் திட்டங்களை மேற்கொண்டது. அப்பள்ளி  2019ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பணியாற்ய கமலா ராணி என்பவரின் முன் முயற்சியாலும் கிரேஷ் ஞான ஜெபா என்ற தனிப்பட்ட ஆசிரியரின் தனிப்பட்ட ஆர்வத்தின்பேரிலும் இந்தச் செயல்பாடு தொடங்கிய  சிறந்த பசுமைப் பள்ளி என்கிற விருதைப் பெற்றது.

அப்போது பேசிய அமைச்சர், “மாணவர்களாகிய உங்களிடம் இருக்கின்றன திறமைகள் கற்பனைகள் வெளிப்படுத்த இந்த இதழ்கள் உங்களுக்கு வழி வகுக்கும். உங்களிடம் உள்ள வாசிப்புத் திறனை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் கொண்டுவந்த திட்டம்தான் இது. நான் நல்லா கவிதை எழுதுவேன், நல்லா வரைவேன், நல்லா கதை சொல்லுவேன் என்கிற குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டும் என்கிற ஆசை முதலமைச்சருக்கு உள்ளது. ஊஞ்சல் என்கிற இதழ் 80 ஆயிரம் இதழ்கள் அச்சிட்டு ஒவ்வொரு வகுப்புக்கும் விநியோகிக்கப்படும். தேன்சிட்டு 1 லட்சம் பிரதிகள் அச்சிட்டு பள்ளிகள் தோறும் வழங்கப்படும்.

இந்த இதழ்களைப் படிக்க மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் வழங்கப்படும். இதற்காகப் பள்ளியில் நேரம் ஒதுக்கப்பட்டு இதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் திட்டம்தான் இதழ்களின் நோக்கம்.

அதேபோல் ஆசிரியர்களின் பள்ளி அனுபவங்கள், கற்பனைத் திறனை எழுத் தார்வத்தைப் பயன்படுத்தும் விதமாகக் கொண்டுவந்த இதழ்தான் கனவு ஆசிரியர் என்கிற மாத இதழ். இது மாதம்தோறும் 38 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு வெளிவருகிறது.

ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் உள்ள மாணவரின் திறமை அங்கேயே முடங்கிவிடக்கூடாது, அது தமிழ்நாடெங்கும் பரவிப் புகழ்பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்த நேரத்தில் மாணவர்களின் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும் அதேநேரத்தில் உங்களிடம் உள்ள திறமைகளையும் கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த இதழ்களைக் கொண்டு வந்திருக்கிறோம். நல்ல நோக்கத்தில் அரசு கொண்டுவந்திருக்கிற இந்தத் திட்டத்தை மாணவச் செல்வங்களும் ஆசிரியப் பெருமக்களும் நல்லவிதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

`கனவு ஆசிரியர்’ என்ற இதழ் கல்வி, வாழ்க்கை, சமூகம், நலம், பொது என பல உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது. பள்ளி மேலாண்மைக்குழுவின் அவசியம், புதுமையான முறையில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் முறைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆசிரியர்களின் அணுகு முறை எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு வழங்கப் படுகிறது.

இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் அறிவைத் தூண்டும் வகையில், ஆரோக்கிய டிப்ஸ், தொழில்நுட்ப அறிமுகம், பொது அறிவுத் தகவல்கள், சுவாரஸ்ய சம்பவங்களும், ஆசிரியர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் சிறுகதைகள், பார்க்கவேண்டிய சினிமா பற்றிய விமர்சனங்கள்கூட அடங்கியிருக்கின்றன. மேலும், இந்த இதழிலுள்ள சிறப்பு என்னவென்றால் இதில் பெரும்பாலான கதைகள், கட்டுரைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களேதான் எழுதுகிறார்கள்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ஊஞ்சல்’ இதழ் மாதம் இருமுறை வெளியாகும். முழுக்க மழலைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான மகிழ்ச்சிப் பாடல்கள், உயிரினங்கள் சொல்லும் சிறார் கதைகள், சித்திரக் கதைகள் என நிரம்பிக்கிடக்கின்றன. கலைத்திறனை வளர்க்கும் வகையில் ஓரிகாமி காகித மடிப்புக்கலை, ஓவியம் வரைதல் பயிற்சி மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் புதிர்கள் கண்டுபிடித்தல், விடுகதைகள், புதிய நூல்களின் அறிமுகம், ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு, பாரம்பர்ய நினைவுச்சின்னங்கள், உயிரினங் கள் குறித்து சுவாரஸ்ய துணுக்குகள், கலை அறிவு என இரண்டையும் இந்த இதழ் பயிற்றுவிக்கிறது. முக்கியமாக, இதழின் நடுப்பக்கத்தில் ‘மாணவர் படைப்புகள்’ எனும் தலைப்பில், மாநிலம் முழுக்க உள்ள பல்வேறு அரசுப் பள்ளி குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்று சித்திரச்சோலையாக காட்சியளிக்கிறது.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கானது ‘தேன் சிட்டு’ என்கிற மாதமிருமுறை இதழ். பதின்பருவ மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அறிவியல் சார்ந்த கேள்வி பதில்கள், புதிர்கள், அறிவியல் சோதனைகள், தொல்லியல் வரலாறுகள், தலைவர்கள் வரலாறு, விளையாட்டுகள், ஆரோக்கியமான உணவுமுறைகள், வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் என இதழ் முழுக்க பொது அறிவுச் சுரங்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பாடப்புத்தகங்களைத் தாண்டிய வெளியுலக அறிவை இந்த இதழ் மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை!

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரிடம் பேசும்போது, “அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்துக்கு வெளியில் இருக்கும் உலகை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்மூலம் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் (LSRW – Listening, Speaking, Reading, Writing) ஆகிய கற்றலுக்கான திறன்களை மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இந்த இதழ்கள் கொண்டு சேர்க்கப்படும். மாணவர்கள் இந்த இதழை படிப்பதற்காகவே பிரத்யேகமாக நேரம் ஒதுக்கித் தரப்படும். இந்த இதழ்களை அடிப்படையாக வைத்து பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். மேலும், இதழில் மாணவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் வகையில் அவர்களின் ஓவியங்கள், கதைகள், கவிதைகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடப்படும்.

முக்கியமாக வருங்காலத்தில் தொடர்ந்து, இதழுக்கு அதிகமாக படைப்புகளை வழங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கி இதழின் ஆசிரியர் குழுவில் (Editorial Team) அவர்களை இடம்பெறச் செய்யும் வகையில், ‘மாணவர் எழுத்தாளர் திட்டத்தை’ அறிமுகப்படுத்தவிருக்கிறோம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!